Sunday, 05 July, 2009
தாயை கொன்ற அண்ணன் கைது
சென்னை, ஜூலை 5: பணத் தகராறில் தாயை தள்ளிவிட்டு கொலை செய்ததாக அவரது மகளை போலீசார் கைது செய்தனர். உரிய சான்றிதழ் இல்லாமல் தகனம் செய்ததாக இரு மயான ஊழியர் களும் கைது செய்யப்பட்டனர். வளசரவாக்கத்திலுள்ள சகதாரா நகரைச் சேர்ந்தவர் நாராயணி (வயது 74) இவர் தன் மூத்த மகன் பரமேஸ்வரனுடன் (வயது 50) வசித்து வந்தார். இவரது இளைய மகன் அனந்த நாராயணன் (வயது 40) டெல்லியில் பணியாற்றி வருகிறார்.
.
நேற்று மன்தினம் பரமேஸ்வரன் தன் மகளின் கல்விக்கடனுக்கு மாதத் தவணை கட்டுவதற்கு தன் தாயிடம் ரூ.1000/ கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு நாராயணி தர மறுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் பரமேஸ்வரன் தன் தாயை பிடித்து தள்ளியதாகவும் கூறப்படுகிறது.இதில் டைனிங் டேபிள் மீது விழுந்த நாராயணிக்கு தலையில் காயம் ஏற்படவே அவரை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் பரமேஸ்வரன், அங்கு நாராயணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.பின்னர் தாயின் உடலை எடுத்து வந்து டெல்லியில் உள்ள தன் தம்பி மற்றும் உறவினர்களுக்கு சொல்லி இறுதிச் சடங்கு நடத்தி உடலை வளசரவாக்கம் சுடுகாட்டில் எரித்து விட்டனர். அதன் பின்னர் இரவில் துக்கம் தாங்காமல் கதறி அழுத பரமேஸ்வரன், தான் தள்ளிவிட்டதால் தான் அம்மா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பி அனந்த நாராயணன், போலீசில் சென்று புகார் தர, தாயை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் மரணத்துக்கான காரணத்தை எடுத்துரைக்கும் மருத்துவமனை சான்று இல்லாமல் உடலை எரித்ததாக சின்னகுட்டி, சீனிவாசன் என்ற இரு மயான ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டியிடம் கொள்ளை
சென்னை, ஜூலை 5: கே.கே.நகரில் ஒரு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண் ஊதுபத்தி வியாபாரியை தேடி வருகின்றனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கே.கே.நகர் சத்யா கார்டனில் வசித்து வருபவர் துவாரகா நாத். இவரது தாயார் சரோஜா ராகவன் (வயது 85). நேற்று துவாரகா நாத் தனது மனைவியுடன் திருச்சிக்கு சென்று விட்டார். மாலையில் பேரன் ஸ்ரீவத்சனும், தனது மனைவியுடன் ஷாப்பிங் சென்று விட்டார். அப்போது மூதாட்டி சரோஜா ராகவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஊதுபத்தி விற்கும் ஒரு பெண் வந்து சரோஜா ராகவனிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதுபோல தானும் ஒருமுறை வீட்டில் தனியாக இருந்த போது சில மர்ம நபர்கள் வந்து தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறியுள்ளார்.எப்படி அந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றார்கள் என்பதை சரோஜா ராகவனிடம் அந்த பெண் செய்து காட்டியிருக்கிறார். இதற்காக மூதாட்டி அணிந்திருந்த நகைகளையெல்லாம் அவர் கழற்றியிருக்கிறார். பின்னர் மீண்டும் அவற்றை போடுவது போல போட்டு 15 சவரன் கொண்ட 2 செயின்கள் மற்றும் 3 வளையல்களை அந்த பெண் சாமர்த்தியமாக அபகரித்து சென்று விட்டார்.ஆயினும் அந்த மூதாட்டியின் வைர மூக்குத்தி உள்ளிட்ட சில நகைகளை மட்டும் அவர் எடுத்து செல்லவில்லை. பின்னர் பேரன் வீடு திரும்பியதும் தான் அந்த பெண் நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்து சென்றது மூதாட்டிக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீவத்சன் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற அந்த பெண் வியாபாரியை தேடி வருகிறார்.
பெண்ணை கிணற்றில் வீசி கொலை
திருவண்ணாமலை, ஜூலை 6: திருவண்ணாமலை அருகே ஊமைப் பெண் ஒருவரை மர்ம ஆசாமிகள் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகால் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கலைவாணி (வயது 30). இவருக்கு காது கேட்காது, பேசவும் முடியாது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், இவருக்கும் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். இவருக்கு சாருமதி என்ற சத்யா (வயது 8) என்ற பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவரும், அவரது தந்தை சுப்பிரமணியும் வேங்கிகாலில் உள்ள மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம் பின்புறம் உள்ள பெருமாள் என்பவர் நிலத்தில் வேலை முடித்து விட்டு சாப்பிட்டுள்ளனர்.சுப்பிரமணி அங்குள்ள பம்புசெட் மோட்டார் அறையில் படுக்க சென்றார். சிறிது நேரத்தில் அவரது அறையை மர்ம ஆசாமி தாழ்பாள் போட்டாராம். அதை சுப்பிரமணி யார் என்று கேட்டுள்ளார். ஆனால் எந்த சத்தமும் வரவில்லை. அந்த நேரத்தில் மகள் கலைவாணியின் கூச்சல் சத்தம் மூன்று முறை கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி கத்தியால் மோட்டார் அறையின் கதவை உடைத்து வெளியில் வந்து கலைவாணியைத் தேடினாராம். பின்னர் கிணற்றில் சென்று பார்த்தபோது கலைவாணி பிணமாகக் கிடந்தது கண்டு அவர் கூச்சல் போட்டார். அதை கேட்டு அங்கு பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். உடனே கிணற்றில் இருந்து பிணத்தை வெளியில் எடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் மற்றும் போலீசார் சென்று பிணத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.பன்னீர் செல்வம் வந்து பார்வையிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்த வாலிபர் தலை மீட்பு
தாம்பரம், ஜூலை 9: சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த வாலிபரின் தலை இன்று மீட்கப்பட்டது. தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் பூபேஸ் (வயது 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் மனமுடைந்த இவர், ஊரப்பாக்கத்திற்கும், கூடுவாஞ்சேரிக்கும் இடையே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
.
ரெயில் முன் பாய்ந்ததால் பூபேஸ் தலை துண்டாகி உடல் மட்டுமே தண்டவாளம் அருகே கிடந்தது. தகவலறிந்து தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபேசின் தலையில்லா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தலையை போலீசார் அருகில் உள்ள பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலையில் ஊரப்பாக்கம் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள ஒரு முட்புதரில் மனித தலை ஒன்று கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பூபேசின் தலையாக இருக்கலாம் என்று
மயக்க சாக்லெட் தந்து கொள்ளை
சென்னை, ஜூலை 9: வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம், பர்தா அணிந்த பெண் தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு மயக்க சாக்லெட்டை கொடுத்து அப்பெண் அணிந்திருந்த 10 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளார். நகையை பறிகொடுத்த பெண் மயக்க நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
.
இந்த நூதன திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கொளத்தூர் சிலந்தி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (வயது 22). செல்வம் வேலைக்கு சென்ற பின் ஆனந்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று பகல் இரண்டரை மணி அளவில் ஆனந்தி வீட்டிற்கு ஒரு பர்தா அணிந்த பெண் வந்துள்ளார். ஆனந்தியிடம் தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டவுடன், ஆனந்தி தண்ணீர் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து பர்தா அணிந்த பெண் ஆனந்தியிடம் 2 சாக்லெட்டுகளை கொடுத்துள்ளார். அந்த சாக்லெட்டை சாப்பிட்ட ஆனந்தி மயக்கமடைந்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பர்தா அணிந்த மர்ம பெண் ஆனந்தி அணிந்திருந்த 10 சவரன் நகைகளை அபகரித்துக்கொண்டு மாயமானார். அரைகுறை மயக்கத்துடன் மாலையில் எழுந்த ஆனந்தி சுதாரித்துக்கொண்டு தன் நகைகள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக தனது கணவருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.இது குறித்து செல்வம் கொளத்தூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ஆனந்திடம் விசாரணை நடத்தியதில் ஆனந்திக்கும் இன்னும் மயக்கம் சரியாக தெளியவில்லை என்பதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.தொடர்ந்து பர்தா அணிந்து வந்து நூதன முறையில் திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.இதுவரை ரெயில்களில் மயக்க பிஸ்கட், மயக்க குளிர்பானம் கொடுத்து கொள்ளையடித்த சம்பவம், இப்பொழுது வீடுகளிலும், மயக்க சாக்கெட் கொடுத்து திருடும் கும்பல் போலீசுக்கு சவாலாக திகழ்ந்து வருகிறது
தந்தைக்கு கொலை மிரட்டல்
ஆவடி, ஜூலை 9: பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வலியுறுத்தி அந்த பெண்ணின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாடி கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 48). இவரது மகள் சாந்தி (வயது 15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் (வயது 26). இவர் இந்தப் பகுதியில் பல பேரை மிரட்டும் ரவுடி என்று கூறப்படுகிறது. இவர் சுப்பையாவிடம் சென்று உங்களை மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.இது குறித்து சுப்பையா கொரட்டூர் போலீசில் கொடுத்த புகார் தொடர்பாக எஸ்.ஐ. செங்குட்டுவன் முபாரக் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்
தப்பியோடிய கைதி சுட்டுக்கொலை
சென்னை, ஜூலை 9: சென்னை புழல் சிறையில் இருந்து திருத்தணி கோர்ட்டுக்கு வழக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அரக்கோணத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 24). இவர் மீது ஆர்.கே.பேட்டை காவல்நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
.
இந்த வழக்குகள் சம்பந்தமாக இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இன்று இவர் சம்பந்தமான வழக்கு ஒன்று திருத்தணி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதற்காக சென்னை புழல் சிறையில் இரந்து தனசேகரை போலீசார் வேன் மூலம் திருத்தணிக்கு இன்று அழைத்து சென்றனர்.பகல் சுமார் 12 மணியளவில் திருத்தணி அருகே வேன் சென்று கொண்டிருந்ததாம். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய தனசேகர் வேனிலிருந்து குதித்து ஓட்டம் பிடித்தான். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் தனசேகரனை பின்தொடர்ந்து பிடிக்க சென்றனர். ஆனால் போலீசாரின் பிடியில் சிக்காமல் தனசேகர் ஓடினான்.இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் தனசேகரரை நோக்கி சுட்டனர். இதில் தனசேகர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து திருவள்ளூர் போலீஸ் எஸ்.பி. சாரங்கன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய கைதி சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனைவி கருகி சாவு
சென்னை, ஜூலை 9: காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்ட ஜோடி கோட்டூர் புரத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது மர்மமான முறையில் தீக்காயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி மனைவி இறந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப் பட்டு வருகிறது. வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.
.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோட்டூர்புரம் யாதவாள் தெருவில் வசிப்பவர் சீனிவாசன். இவர் அந்த பகுதியில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீடு ஒன்றில் ராஜா (வயது33) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார்.இவரது மனைவி மாலதி (வயது25). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11.30 மணியளவில் இவர்க ளது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. தீயில் பொருட்கள் கருகிய வாசனையும் வந்ததை யடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர் கள் அவரது வீட்டின் முன் கூடினர்.மூடி இருந்த கதவின் வழியாக புகை வந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தி னர் உடனடி யாக கதவை திறந்து பார்த்தபோது வீட்டினுள் மாலதியும், ராஜாவும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த னர். வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தீயில் எரிந்து நாசமாகி இருந்தது. உடனடியாக தீக்காயங்க ளுடன் உயிருக்கு போராடிய கணவன் மனைவி இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து உடனடி யாக போலீசாருக்கு தகவல் தரப் பட்டது. கோட்டூர்புரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சந்திரன் தலைமை யில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜா எலக்ட்ரி கல் தொடர்பான வேலைகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்ததும், இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.வீட்டினுள் கொசுவர்த்தி ஏற்றி வைத்த தில் தீபிடித்து அதில் இருவரும் கருகி இருக்கலாம் அல்லது சமையல் எரி வாயு லீக் ஆகி அதில் தீ பிடித்து இருக்க லாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மாலதி இறந்து விட்டார். ராஜா உயிருக்கு போராடிய நிலை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர்களது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகுதான் முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
3 சிறுவர் கைது
சென்னை, ஜூலை 10: கொடுங்கையூர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவி கொலை வழக்கில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருடச்சென்ற போது மூதாட்டி சத்தம்போட்டதால் காட்டிக்கொடுத்து விடுவார் என்ற பயத்தில் கொலை செய்ததாக சிறுவர்கள் போலீசில் கூறியுள்ளனர்.
.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கொடுங்கையூர், திருவிக நகர், லிங் ரோடு பகுதியில் வசிப்பவர் லட்சுமி குட்டி (வயது 72). இவரது கணவர் ராம். சென்னை குற்றப்பிரிவு போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்று சமீபத்தில் இறந்துவிட்டார். இவரது மகன் சாமி (வயது 35). இவர் திருமணமாகி குடும்பத்துடன் பெரம்பூரில் வசித்து வருகிறார்.லட்சுமி குட்டி, கொடுங்கையூரில் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது மகன் தினமும் மாலையில் வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.அது போன்று கடந்த 27-ம் தேதி சாமி, அம்மா வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அழுத்தியும் கதவு திறக்க வில்லை. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கத்திக்குத்து காயங்களுடன் லட்சுமிகுட்டி ஹாலில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் கொடுங்கையூர் போலீசில் இதுகுறித்து சாமி புகார் கூறவே, இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் பிணத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை முன் விரோதத்தினால் நடந்ததா? அல்லது சொத்துக்காக நடந்திருக் கலாம் என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில், நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. லட்சுமிகுட்டியை கொலை செய்ததாக அந்த 3 சிறுவர்களும் ஒப்புக் கொண்டனர். அவர் கள் போலீசிடம் கூறும் போது, திருடுவதற்காக அந்த வீட்டிற்கு சென்றோம். அப்போது மூதாட்டி சத்தம்போட்டார். உடனே கத்தியை எடுத்து மூதாட்டியின் கழுத்தில் வெட்டினோம். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி கீழே விழுந்துவிட்டார்.பின்னர் வீட்டை சுற்றி பார்த்த போது நகைகள் எதுவும் இல்லை, ரூபாய் 700 மட்டுமே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு வரும் போது மூதாட்டி மயக்கம் தெளிந்து காட்டி கொடுத்துவிடுவார் என்று பயந்து மார்பு மற்றும் வயற்றில் கத்தியால் குத்தி சாகடித்தோம்.பின்னர் மோப்ப நாய் கண்டு பிடிக்காத அளவிற்கு வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து மூதாட்டி மீதும் அவரை சுற்றியும் தூவி விட்டு சென்று விட்டோம் என்று கூறினர். இவர்கள் கொடுங்கையூர், சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவர்கள் என்பதும், இவர்கள் மீது அப்பகுதியில் கொள்ளை சம்பவத்தில் பல வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. சிறுவர்கள் மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக